ஏவிஎம் ஸ்டுடியோ வழியாக தற்செயலாக நடந்து சென்ற 16 வயது இளம்பெண்ணை பார்த்த நடிகர், இயக்குனர் வினு சக்கரவர்த்தி, இந்த பெண் கண்டிப்பாக சினிமாவில் நடித்தால், மிகப்பெரிய உயரத்திற்கு வருவார் என்று அப்போதே கணித்து, அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தார். அவர்தான் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக, கனவுக்கன்னியாக இருந்த சில்க்ஸ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வினுசக்கரவர்த்தி உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்பட்டார். ஆனால் வினுசக்கரவர்த்தி நாடகங்களில் நடிப்பதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் அவரது தந்தை மிகவும் மனம் வருந்தி, நாடகம் எல்லாம் நமக்கு சரியாக வராது, நீ நன்றாக படித்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று அறிவுரை கூறினார். அப்பாவின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு பக்கம் நன்றாக படித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் நாடகத்தில் நடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தனது மகன் நாடகங்களில் நடித்து கெட்டுப் போகிறானே என்று வருத்தம் அடைந்த வினுசக்கரவர்த்தி தந்தை அவரை சென்னைக்கு தனது உறவினர் வீட்டிற்கு படிப்பதற்காக அனுப்பினார்.
சென்னை வந்ததும் ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வினுசக்கரவர்த்தி, இன்னொரு பக்கம் நாடகத்திலும் கவனம் செலுத்தினார். ஜெயின் கல்லூரியில் அவர் பட்டப்படிப்பு படிக்கும் போது அவரே ஒரு நாடகத்தை இயக்கினார். இந்த நாடகத்திற்கு தலைமை தாங்கிய அப்போதைய டிஜிபி, உன்னுடைய உடல்வாகு போலீஸ் அதிகாரிக்கு ஏற்றதாக இருக்கிறது. எனவே நீ கல்லூரி படிப்பை முடித்தவுடன் என்னை வந்து பார், உனக்கு நான் போலீஸ் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார்
அதேபோல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் டிஜிபியை பார்த்தபோது, அவர் போலீஸ் வேலைக்கு அமர்த்தபட்டார் என்பதும் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் சில மாதங்கள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவருக்கு நடிப்பு, நாடகம் மீது உள்ள ஆர்வம் காரணமாக அவர் வேலையை ராஜினாமா செய்தார். தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. அதிலும் சில வருடங்கள் அவர் வேலை பார்த்தார். ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு கன்னட இயக்குனரை தற்செயலாக பார்த்தார். அவர்தான் இயக்குனர் பாரதிராஜாவும் உதவியாளராக இருந்தார் என்பதை அறிந்து கொண்டு, ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
இதனை அடுத்து ரோஜாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றினார். அப்போது இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு புதுமுகம் தேவை என அந்த படத்தின் இயக்குனர் கே விஜயன் கூற, வினுசக்கரவர்த்திக்கு விருப்பம் இல்லை என்றாலும் இயக்குனர் கூறியதற்காக ஒப்புக்கொண்டார். அப்போதுதான் ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் நின்று கொண்டிருக்கும்போது தற்செயலாக தன்னை கடந்து சென்ற ஒரு பதினாறு வயது இளம்பெண்ணை பார்த்தார். அவருடைய கண்கள் காந்தம் போல் இருப்பதை பார்த்த அவர், இவர் நிச்சயம் சினிமாவில் சேர்ந்தால் திரை உலகில் உச்சத்துக்கு வருவார் என்பதை கணித்தார்.
இதனை அடுத்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தபோது, தான் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு வாரம்தான் ஆகிறது என்றும் தனக்கு தமிழ் தெரியாது என்றும் தன்னுடைய சித்தி வீட்டில் இருப்பதாகவும் அந்த பெண் கூறினார். உனக்கு நடிக்க ஆசையா என கேட்டபோது, நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்கிறேன், எங்கள் ஊர் திருவிழாக்களில் எல்லாம் நான் நடனம் ஆடி இருக்கிறேன் என்று கூறினார். அவரது பெயர் விஜய் மாலா என்பதையும் தெரிந்து கொண்ட வினுசக்கரவர்த்தி, அவருடைய சித்தியிடம் இந்த பெண்ணை சினிமாவுக்கு நடிக்க அனுப்புங்கள், நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார். அவர்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் சில்க் என்பதால் பின்நாளில் அவர் சில்க் ஸ்மிதா என்றே அழைக்கப்பட்டார்
இதன் பின்னர் சில்க் ஸ்மிதா, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட அவர் நடனமாடாத படமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கடந்த 80கள், 90களில் அவர் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் என்பதும் அவருக்கு தென்னிந்திய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வினுசக்கரவர்த்தியும் கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கோபுரங்கள் சாய்வதில்லை, தம்பிக்கு எந்த ஊரு, கரிமேடு கருவாயன், அம்மன் கோயில் கிழக்காலே, மனிதன், குருசிஷ்யன், என ரஜினிகாந்த் உள்பட பல ஹீரோக்களின் படங்களில் நடித்தார். காமெடி நடிகராகவும் வில்லன் நடிகராகவும் அவர் தமிழ் திரையுலகில் ஜொலித்தார் என்பதும் ஒரு கட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வந்த வாய்ப்புகளை பயன்படுத்திய அவர், நடிகராக மட்டுமின்றி அவர் ஒரு கதாசிரியர் மற்றும் இயக்குனராகவும் இருந்தார். வண்டிச்சக்கரம், கோயில் புறா, பொண்ணுக்கு ஏத்த புருஷன் ஆகிய படங்களில் கதாசிரியராக பணியாற்றினார்.
தன்னை அறிமுகம் செய்ததால் சில்க் ஸ்மிதா இவரைத்தான் தனது சினிமா குருவாக நினைத்துக் கொண்டிருந்தார் என்பதும் எந்த புதிய வேலை செய்தாலும் அவரிடம் ஆலோசனை கேட்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதாவை வினுசக்கரவர்த்தி தனது மகள் போலவே நினைத்து அவரை பாதுகாத்தார். ஒரு பேட்டியில் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், அந்த ஜென்மத்தில் தனக்கு சில்க்ஸ்மிதா மகளாக பிறக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது வினுசக்கரவர்த்தியின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை. இந்த நிலையில் தான் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் உருவானது, அந்த படத்திற்கு வினு சக்கரவர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் . அந்த படத்தில் கூறப்பட்ட பல தகவல்கள் பொய்யானது என்றும், சில்க் ஸ்மிதா அப்படிப்பட்டவர் இல்லை என்றும், அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
நடிகர் வினுசக்கரவர்த்திக்கு ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. தனது இரண்டு குழந்தைகளிடம் அவர் சினிமா வேண்டாம், உங்களுக்கு விருப்பமான வேறு நல்ல துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார். அது போலவே வினுசக்கரவர்த்தியின் மகன் லண்டனில் டாக்டராகவும், மகள் அமெரிக்காவில் பேராசிரியராகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நடிப்பு பாணியை புதிதாக அமைத்துக் கொண்டு நடிப்பில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி, கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவர் காலமானாலும் அவரது திரைப்படங்கள் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.