மக்கள் திலகம் எம்ஜிஆரை நடிகவேள் எம்ஆர் ராதா கடந்த 1967ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டார். அதனை அடுத்து நான்கு மாதங்கள் கழித்து அதாவது 1967ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் அரசகட்டளை.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பே இந்த படத்தையும் 90% படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங்கும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. எனவே இந்த படத்தில் எம்ஜிஆர் குரல் மாற்றம் அவ்வளவாக தெரியாது. ஐந்து சதவீத டப்பிங் மட்டுமே துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முழுக்க முழுக்க துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் வெளியான காவல்காரன் என்ற திரைப்படத்தை பார்த்து தான் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த படத்தில் எம்ஜிஆரின் குரல் முழுமையாக மாறிவிட்டதை கண்டு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் வருத்தம் அடைந்தனர்.
’அரச கட்டளை படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, ஜெயலலிதா, அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணி இயக்கி ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்தார். ஆர்எம் வீரப்பன் திரைக்கதை வசனத்தில், கேவி மகாதேவன் இசையில் இந்த படம் உருவானது. இந்த படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற்றது. அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டான நிலையில் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
தன் தந்தையின் உயிரை கொடுத்தவன் தரணி ஆள்வதா என்று பொங்கி எழும் எம்ஜிஆர், எம்ஜிஆரை எதிர்க்கும் கொடுங்கோல் மன்னன் பிஎஸ் வீரப்பா ஒரு கட்டத்தில் திடீரென மனம் மாறி எம்ஜிஆரிடம் மகளையும் நாட்டையும் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகிறார். மன்னர் மகளையும் மணிமுடியையும் தனதாக்கி கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சிகள் செய்யும் தளபதி ஆர்எஸ் மனோகர், அண்டை நாடு அல்லிராணி சரோஜாதேவியின் காதல் மற்றும் சதி, அப்பாவி பெண் ஜெயலலிதா எம்ஜிஆரை சுற்றி சுற்றி காதலிக்கும் நிலை. இவ்வாறு சூழ்ச்சி, காதல் மற்றும் குழப்பங்களுக்கு பின்னால் இறுதியில் நாட்டு மக்களின் அன்பை பெறும் எம்ஜிஆர் எடுக்கும் முக்கிய முடிவு, இதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் ’அண்ணா அண்ணா என்று அழைக்கும் காலம் போய், மன்னா மன்னா என அழைக்கும் காலம் வரப்போகிறது என்ற வசனம் வரும். பேரறிஞர் அண்ணா விரைவில் முதலமைச்சராவார் என்பதை மறைமுகமாக விளக்கும் வசனம் தான் இது. ஆனால் இந்த படம் வெளியாகும் முன்னரே அண்ணா முதலமைச்சர் ஆகிவிட்டார்.
அதேபோல் இந்த படத்தில் இடம் பெற்ற ’என்னை பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன் தான் தலைவன் என்ற பாடல் ஜெயலலிதா பாடுவது போல் வரும். எம்.ஜி.ஆரின் கொடை வள்ளலை குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கும் என்பதும், இந்த பாடலை வாலி எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை, அந்த வாசலில் காவல்கள் இல்லை, அவன் கொடுத்தது எத்தனை கோடி, அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி என்று வாலி எழுதியிருப்பார்.
இந்த படம் 1967ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியானது. எம்ஜிஆர் சுடப்பட்டவுடன் வெளியான முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. குறிப்பாக மதுரை தேவி தியேட்டரில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் ஒரு கட்டத்தில் திரையரங்கின் வெளிக்கதவை மூடி விட்டார்கள் என்றும் ஆனால் கதவை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே வந்ததாகவும் கூறப்பட்டது
இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் நன்றாக இருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி அடைந்த ஒரு படமாக அமைந்தது.