லலித்- லோகேஷ் ஓவர் பில்டப்.. மொக்கை வாங்கிய லியோ..!


தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில் உருவான லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், நடுநிலை பார்வையாளர்கள் மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. வாரிசு திரைப்படம் போல குடும்பங்கள் கொண்டாடும் படம்  என்று ஏமாற்ற முடியாத அளவிற்கு இந்த படத்தில் குடும்ப ஆடியன்ஸ் வரும் அளவுக்கு எந்த காட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக இரண்டாம் பாதியில் விஜய் ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், குடும்ப ஆடியன்ஸ் சுத்தமாக இந்த படத்தை பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பது தான் நிஜம். 

இந்த நிலையில் லியோ படத்தின் வசூல் குறித்த தகவல்களை தயாரிப்பாளர்  கூறி வருவதையும் சினிமா ட்ராக்கர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறியிருப்பதை பலர் பொய் என்று கூறி வருகின்றனர். திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான ஸ்ரீதர் என்பவர் இந்த தொகை என்பது நிச்சயம் பொய்யான தகவல் என்றும், எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இன்றி இந்த தொகை கூறப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 


மேலும் சமூக வலைதளத்தில் பல ட்ராக்கர்கள் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூறி வருகின்றனர். முதல் நாள் வசூல் தொகையையே யாரும் நம்பவில்லை. பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியான ஜவான் திரைப்படமே முதல் நாள் 129 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், நான்காயிரம் திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம் எப்படி 148 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்ற கேள்விக்கு இதுவரை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதிலிருந்து அவர் கூறியது எந்த  அளவுக்கு உண்மை தன்மையாக இருக்கும் என்பது தெரியவருகிறது.  


இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முந்த வேண்டும் என்பதற்காக போலியான வசூல் கணக்குகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நாங்கள் ரஜினியை வென்று விட்டோம் என்று கூறுவதற்காகவே, அவர்களது பேச்சு இருப்பதாகவே கருதப்படுகிறது. ஒரு படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது  தயாரிப்பாளரை தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அந்த தயாரிப்பாளரே தவறான தகவலை தரும்போது இனிவரும் காலங்களில்  ஒரு திரைப்படத்தின் வசூல் என்பது  நிச்சயம் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க வேண்டிய நிலை வரும். 


இந்த படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் லலித் மற்றும் லோகேஷ் தான் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்து, அவர்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தனர்.  லோகேஷ் மற்றும் விஜய் முதல்முதலாக இணைந்த மாஸ்டர் திரைப்படமே ஒரு சுமாரான திரைப்படம் தான். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல மாதங்களாக திரையரங்குகளில் சென்று படம் பார்க்காமல் இருந்த பார்வையாளர்கள், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக மாஸ்டர் படத்தை பார்த்தனர். ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் மிகவும் சுமாரானது தான் என்பதும், அந்த படத்தை பலர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல் தான் லியோ படத்தையும் மாஸ்டர் படத்தை விட சுமாராக லோகேஷ் கனகராஜ் எடுத்து வைத்திருக்கிறார்.  விக்ரம் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்ததன் காரணமாக லோகேஷ் கனகராஜ் மீது பார்வையாளர்கள் நம்பிக்கை வைத்தனர். விக்ரம் போன்று ஒரு மாஸ் படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரையும், அதன் பிறகு ப்ரோமோஷன் நாட்களிலும் லலித் மற்றும் லோகேஷ் கனகராஜ் செய்த  பில்டப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.  இந்த பில்டப் காரணமாக இந்த படம் தமிழில் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக இருக்கும் என்று கூட பலரை பேச வைப்பது. ஆனால் இந்த படம் ஒரு சராசரி படத்தை விட சுமாரான படமாக இருந்ததை பார்த்து ரசிகர்களை அதிருப்தி அடைந்தனர். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்ற சொல்லிற்கு ஏற்ப இந்த படத்தின் ஓவர் பில்டப் தான் இந்த படத்தை தோல்வி அடைய செய்துள்ளது.


இந்த படத்தின் வசூல் குறித்து நடுநிலை ட்ராக்கர்கள் கூறிய போது முதல் ஒரு வாரத்தில் இந்த படம் 200 முதல் 300 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருக்கும் என்றும் அந்த வசூலை தாண்ட வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர். 500 கோடி வசூல் செய்து விட்டதாக கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பது தயாரிப்பாளரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் 


மேலும் இந்த படத்தை தயாரித்தது விஜய் தான் என்றும் லலித் ஒரு சிறிய தொகை மட்டுமே இதில் முதலீடு செய்திருப்பதாகவும், முழுக்க முழுக்க விஜய் தான் இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.  இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றுதான் பலர் கூறுகின்றனர்


விஜய் சொந்த படம் தயாரிப்பதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை ஏன் அவர் தன்னுடைய படம் என்று சொல்லாமல், இன்னொருவருடைய படம் என்று சொல்வதற்கான காரணம் என்ன என்பதுதான் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது. அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட விஜய், தனது சொந்த படத்தையே வேறொருவர் படம் என்று கூறுவதும், சுமாரான வசூல் செய்த படத்தை பில்டப் செய்து அதிகமாக வசூல் செய்த படம் என்று  கூற முயற்சிப்பதும் ஏன், என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. 


ஒரு திரைப்படத்தின் வசூல் நிலையில்கூட நேர்மைத்தன்மையை கடைப்பிடிக்காத விஜய், அரசியலில் எப்படி நேர்மைத்தன்மையை கடைப்பிடிப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் ஒரு திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்களை இனிமேல் தெரிவிக்காமல் அந்த படம் நல்ல படமா, மோசமான படமா என்ற விமர்சனங்களை மட்டுமே முன் வைத்தால் போதுமானது. வருங்கால சினிமாவுக்கும் இதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Previous Post Next Post

Contact Form