பொதுவாக தந்தை பெரியாருக்கு சினிமா என்றாலே பிடிக்காது. அவர் எந்த ஒரு சினிமா விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் ஜெயலலிதா நடித்த ஒரே ஒரு திரைப்படத்தின் விழாவில் மட்டும் அவர் கலந்து கொண்டார் என்பதும், இந்த ஒரு விழா மட்டுமே அவர் கலந்து கொண்ட சினிமா விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுதான் முத்துராமன், ஜெயலலிதா நடிப்பில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான சூரியகாந்தி என்ற திரைப்படத்தின் வெற்றி விழா.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்த படம் வெளியானது. முத்துராமன், ஜெயலலிதா, சோ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். எம்எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் மற்றும் வாலி எழுதிய நான்கு பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றன.
இதில் கண்ணதாசன் எழுதிய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேக்குது, கருடா சவுக்கியமா? என்ற பாடல் இன்றளவும் பிரபலம் என்பதும் அந்த படத்தில் பாடகராக கண்ணதாசனே நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் ’ஓ மெரி திருபா’ என்ற பாடலை டிஎம் சௌந்தரராஜனுடன் இணைந்து ஜெயலலிதா பாடியிருப்பார். மேலும் ’தெரியாதோ நோக்கு என்ற பாடலை மனோரமா பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை என்னவெனில், ஜெயலலிதா மற்றும் முத்துராமன் காதலிப்பார்கள், காதலில் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்வார்கள்.
திருமணத்திற்கு பின்னர் தான் முத்துராமன் மற்றும் ஜெயலலிதா இடையே மனக்கசப்பு ஏற்படும். ஜெயலலிதா அதிகம் சம்பாதிக்கும் பெண்ணாகவும், அவரைவிட குறைவாக சம்பாதிக்கும் நபராகவும் முத்துராமன் இருப்பார். இதனால் ஈகோ காரணமாக முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பிரச்சனை வரும். அந்த பிரச்சனைகளை சமாளித்து ஒரு பெண் எப்படி இந்த சமூகத்தில் மரியாதைவுடன் வாழ்கிறார் என்பதை நிரூபிக்கும் படம் தான் இந்த படத்தின் கதை
இந்த படத்தின் கதையை கேட்டதும் தான் பெரியார் இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தார். அந்த காலத்தில் ஆணாதிக்கம் அதிகம் உள்ள படங்கள் உருவாகி கொண்டிருந்த நிலையில், சூரியகாந்தி திரைப்படம் வித்தியாசமாக ஒரு பெண், ஒரு ஆணின் பிரச்சனைகளை எதிர்கொண்டு, தலைநிமிர்ந்து நின்று, வெற்றி பெறும் கதை என்பதால் பெரியார் என்ற படத்தின் விழாவில் கலந்து கொண்டார். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில், முத்துராமன், ஜெயலலிதா, முக்தா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதும் அனைத்து கலைஞர்களுக்கும் பெரியார் தனது கையாலே விருது வழங்கி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மிகச்சிறப்பான நடிப்பை இந்த படத்தில் காணலாம். முத்துராமன் மிக இயல்பாக செயற்கைத்னம் இல்லாமல் நடித்திருப்பார். ஜெயலலிதா இந்த படத்தில் கிளாமராக ஒரு டூயட் பாடலில் நடனம் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சினிமா விழாவுக்கே வராத பெரியாரை வரவழைத்த ஒரே திரைப்படம் என்றால் அது சூரியகாந்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையில் மீண்டும் ரிலீஸ் ஆனது என்பதும் அப்போதும் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.