எம்ஜிஆர் நடித்த அண்ணா நீ என் தெய்வம் என்ற திரைப்படம், அவர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் பாதியிலே நின்றுவிட, அந்த படத்தின் காட்சிகளை வைத்து திரைக்கதை அமைத்து பாக்கியராஜ் அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தை இயக்கினார்.
எம்ஜிஆர், லதா நடித்த உரிமைக்குரல் என்ற படத்தை ஸ்ரீதர் இயக்கிய நிலையில், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் எம்ஜிஆர், லதா நடிப்பில் அண்ணா நீ என் தெய்வம் என்ற டைட்டிலில் ஸ்ரீதர் ஒரு படத்தை இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் திடீரென தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்த எம்ஜிஆர், இந்த படத்திலிருந்து முழுமையாக விலகி, முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மாநிலம் முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்ய வேண்டிய இருந்ததால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தேர்தலில் ஜெயித்து முதலமைச்சர் ஆகிவிட்ட பிறகு, இந்த படத்தின் தயாரிப்பாளர் எம்ஜிஆரை பார்த்து, இந்த படத்திற்காக அதிக செலவு செய்து விட்டேன் என்றும், இந்த படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்கும்படி கேட்டார். ஆனால் இந்த படத்தை முடிக்க வாய்ப்பே இல்லை, வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் என்று எம்ஜிஆர் கூறியதாகவும், வேறு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறிவிட்டு தயாரிப்பாளர் திரும்பி விட்டதாகவும் கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் தான் எம்ஜிஆர் நடித்த பாதிப்படம் முழுமை பெறாமல் இருப்பதை பாக்யராஜ் கேள்விப்பட்டு அந்த படத்தை பார்க்க விரும்பினார். அந்த படத்தை பார்த்ததும் அவர் அதில் உள்ள காட்சிகளை பயன்படுத்தி, திரைக்கதை அமைத்து, ஒரு புதிய படத்தை எடுக்க விரும்பினார்.
எம்ஜிஆரை சந்தித்து தனது முடிவை பாக்யராஜ் கூறியபோது அவரும் சம்மதித்தார். எம்ஜிஆரே இந்த படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை 1986 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்தாலும் பாக்யராஜ் ஏற்கனவே சில படங்களை ஒப்புக்கொண்டிருந்ததால், அவற்றை முடித்துவிட்டு தான் அவசர போலீஸ் 100 படத்திற்கு வந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகும் போது எம்ஜிஆர் உயிருடன் இல்லை என்பதால் எம்ஜிஆர் இமேஜ்க்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் பாக்யராஜ் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த படம் கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியானது. இரண்டு வேடங்களில் பாக்கியராஜ், கௌதமி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எம்ஜிஆர், லதா, நம்பியார், விஎஸ் ராகவன் மற்றும் சங்கீதா ஆகியோரின் காட்சிகளை, பாக்கியராஜ் தனது ‘அவசர போலீஸ் 100’ படத்தில் பயன்படுத்தி கொண்டார். இந்த படத்தில் நம்பியார், சங்கீதா, விஎஸ் ராகவன் ஆகியோர் மீதமுள்ள சில காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் லதா திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக கூறப்படுவதுண்டு.
இந்த படத்தின் கதையின்படி எம்ஜிஆரின் தங்கையாக சங்கீதா இருப்பார், அவரை நம்பியார் காதலிப்பது போல் நடித்து ஒரு குழந்தையை கொடுத்து கைவிட்டுவிடுவார். இந்த நிலையில் நம்பியாரை தேடி கண்டுபிடித்து அவரை தங்கைக்கு திருமணம் செய்து வைப்பது தான் கதை. இதற்கிடையே எம்ஜிஆர், லதா காதலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் எம்ஜிஆரின் காட்சிகள் மற்றும் பாக்கியராஜின் டச் ஆகியவை இருந்ததன் காரணமாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் ஏற்கனவே கம்போஸ் செய்திருந்த சில பாடல்களை பாக்கியராஜ் பயன்படுத்திக் கொண்டார். அதன்பிறகு மீதமுள்ள சில பாடல்களை பாக்யராஜே கம்போஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சென்சார் பிரச்சனை இருந்ததாகவும் யூ சான்றிதழ் வேண்டுமென்றால் சில காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இந்த படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்தது.