மக்கள் திலகம் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர், கடந்த 1987 ஆம் ஆண்டு காலமான நிலையில், அவரது மறைவிற்குப் பின் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் நல்லதை நாடு கேட்கும். கல்வித்தந்தை மற்றும் தொழிலதிபர் ஜேப்பியார், எம்ஜிஆரின் மிகப்பெரிய தொண்டராக, ரசிகராக இருந்தார். அவர் பல தொழில்களில் ஈடுபட்டிருந்த போதிலும், திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான அவர், எம்ஜிஆர் முதலமைச்சராகும் முன் எடுக்கப்பட்டு பாதியில் நின்ற படங்களில் ஒன்றான நல்லதை நாடு கேட்கும் என்ற படத்தின் காட்சிகளை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்தார். அந்த படம் தான் நல்லதை நாடு கேட்கும்.
நல்லதை நாடு கேட்கும் படத்தில் எம்ஜிஆர், எஸ்வி சுப்பையா, பத்மப்ரியா ஆகியோர் நடித்த சில காட்சிகள் மட்டும் அவருக்கு கிடைத்தது. அந்த காட்சிகளின் உரிமையை பெற்று அதற்கான ஒரு கதையை தயார் செய்து நல்லதை நாடு கேட்கும் என்ற படத்தை உருவாக்கி கடந்த 1991 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார்
இந்த படத்தில் ஜேபிஆர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேகா நடித்தார். மேலும் இந்த படத்தில் ஜெய்கணேஷ், கௌதமி , ராஜேஷ், கவுண்டமணி, செந்தில், உட்பட பலர் நடித்தனர். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாவிட்டாலும் எம்ஜிஆரின் கடைசி படம் என்ற பெயரை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் எஸ்வி சுப்பையா காவல்துறை அதிகாரியாக இருப்பார். அவரது மகள் பத்மப்ரியாவை தான் எம்ஜிஆர் காதலிப்பார். பத்மப்ரியாவின் தந்தைக்கு தெரியாமல் அவரது வீட்டுக்கு வந்து, எம்ஜிஆர் பேசும் வசனங்கள் இந்த படத்தின் முதல் சில நிமிடங்களில் வரும். இது என் வீடு என்று பத்மபிரியா எம்ஜிஆரிடம் கூறிய போது, இது உன் வீடு அல்ல, என் வீடு, இந்த உலகையே வீடாக நான் நினைப்பவன், அப்படிப்பட்ட எனக்கு இந்த வீடும் என் வீடு தானே என்று பொதுவுடமை வசனத்தை எம்ஜிஆர் பேசியிருபார்.
என்னுடைய அப்பா வருமுன் சென்று விடுங்கள், இல்லாவிட்டால் உங்களை திருடன் என நினைத்து விடுவார் என்று பத்மபிரியா கூற, நான் திருடத்தான் வந்தேன், உன்னுடைய உள்ளத்தை, என்று எம்ஜிஆர் கூற, அந்த பேச்சில் மயங்கும் பத்மப்ரியா, எம்ஜிஆரி கட்டி அணைப்பது போன்ற காட்சிகள் இந்த படத்தின் ஆரம்பத்தில் இருக்கும்.
இந்த படத்தில் எம்ஜிஆர் ஜீவா என்ற கேரக்டரில் நடித்திருக்க அவரை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு கேரக்டரில் பத்மப்ரியா நடிக்க, கண்டிப்பாக ஜீவா வருவார், என் அண்ணன் யாரையும் ஏமாற்ற மாட்டார், என்று ஜீவாவின் தம்பி கேரக்டரில் தான் ஜேப்பியார் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக சாமர்த்தியமாக எம்ஜிஆரின் மிகச்சில காட்சிகளை மட்டுமே வைத்து திரைக்கதை தயாரித்து ஜேப்பியார் இந்த படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின் நான்கு ஆண்டுகள் கழித்து வந்த படமாக இருந்தாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் ரசிக்கும் படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த படத்தின் வீடியோ யூட்டியூபில் உள்ளது என்பதும் இதை ஏராளமான பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற ஒரு முயற்சியைத்தான் கே.பாக்யராஜ் எடுத்து எம்ஜிஆர் நடித்த சில காட்சிகளை வைத்து ‘அவசர போலீஸ் 100’ என்ற படத்தை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.