தற்போது டெக்னாலஜி மிக அதிகமாக வளர்ந்துள்ள நிலையில், நிலவுக்கும், மற்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை அனுப்புவது என்பது அவ்வளவு பெரிய சாதனை அல்ல. ஆனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே, விண்வெளிக்கு விண்கலம் அனுப்புவது என்பது பெரிய சாதனையாக கருதப்பட்டது.
1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்ததை உலகமே ஆச்சரியமாக பார்த்தது. ஆனால் அதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே, அதாவது 1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் விண்வெளிக்கு செல்வது போன்ற ஒரு படத்தில் நடித்தார் என்பதும், அதுதான் கலையரசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இயக்குனர் ஏ காசிலிங்கம் என்பவர் வெறும் கற்பனையால் மட்டும் இந்த படத்தை உருவாக்கவில்லை. பல்வேறு விண்வெளி குறித்த நூல்களைப் படித்து, ஹாலிவுட் படங்களை பார்த்து, இந்த படத்தின் திரைக்கதை அமைத்தார். இந்த படத்தின் கதைப்படி எம்ஜிஆர் மற்றும் பானுமதி ஆகிய இருவரும் ஒரு கிராமத்தில் வாழ்வார்கள். ஏழை விவசாயியாக எம்ஜியாரும், பணக்கார, அதே நேரத்தில் பல கலைகளையும் தெரிந்தவராக பானுமதியும் இருப்பார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிப்பார்கள்
இந்த நிலையில் தான் திடீரென விண்வெளியில் இருந்து ஒரு பறக்கும் தட்டு வரும். அதில் நம்பியார் மற்றும் அவரது உதவியாளர் பூமிக்கு வந்து இறங்குவார்கள். தங்களுடைய கிரகத்தில் தொழில்நுட்பரீதியாக அனைத்து வசதிகளும் இருந்தாலும், கலை வளர்ச்சி இல்லை என்பதால், பூமிக்கு வந்து அனைத்து கலைகளிலும் சிறந்த ஒருவரை கடத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் நம்பியார் வந்திருப்பார்.
அவ்வாறு அவர் ஒரு மனிதரை தேடிக் கொண்டிருக்கும்போது தான், பானுமதி தான் அனைத்து கலையில் சிறந்தவர் என்பதை கண்டுபிடித்து, அவரை கடத்திக் கொண்டு பறக்கும் தட்டில் தங்களது கிரகத்திற்கு செல்வார்கள். இதனை அறிந்த எம்ஜிஆர், நம்பியார் கிரகத்துக்குச் சென்று தனது காதலியை எப்படி மீட்டு வந்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் பறக்கும் தட்டு மற்றும் விண்வெளி காட்சிகள் மிகவும் அபாரமாக உருவாக்கப்பட்டிருக்கும். இப்போது பார்ப்பதற்கு அந்த காட்சி மிகவும் எளிமையாக இருந்தாலும், 60 வருடங்களுக்கு முன்னர் அந்த காட்சியை படமாக்குவது என்பது அவ்வளவு சாதாரணமல்ல. அதேபோல் நம்பியார் கிரகத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது என்பதையும் படத்தில் காண்பித்து இருப்பார்கள், அது மட்டுமின்றி விண்வெளியில் ஒரு எம்ஜிஆர் இருப்பார் என்பதும், அந்த எம்ஜிஆரை பூமியில் உள்ள எம்ஜிஆர் சந்திக்கும் காட்சியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமர்சியல் விஷயங்களுக்காக பறக்கும் தட்டில் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் சண்டை போடும் காட்சிகளும் உண்டு. இந்த படத்தை அந்த காலத்தில் உள்ள டெக்னாலஜியை வைத்து மிக அபாரமாக உருவாக்கி இருந்தார்கள் என்பதும், படமும் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இடம்பெற்ற பறக்கும் தட்டு வடிவமைப்பை, கலை இயக்குனர் மிகவும் நுணுக்கமாக செய்து இருந்தார் என்பதும், அந்த சாதனத்தை உருவாக்க அவர் சில மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. விண்வெளிக்கு மனிதர்கள் செல்லும் நிகழ்வையே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், விண்வெளியில் ஒரு திரைப்படத்தை எடுத்து, அதை வெற்றி படமாக்க்கியவர் காசிலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்து இருந்தார் என்பதும், இந்த படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு பாடல்களை பானுமதியே பாடி இருந்தார். பொதுவாக எம்ஜிஆர் படம் என்றால் ராஜா ராணி கதைகளில் நடிப்பார், சமூக கதைகளில் நடிப்பார், புலி சிங்கத்துடன் சண்டை போடுவார் என்று தான் அவருடைய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கலையரசி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மொத்தத்தில் அந்த காலத்திலேயே ஒரு சந்திராயன் த்ரீ, ஆதித்யா எல்.ஒன் விண்கலத்தை ஞாபகப்படுத்தும் ஒரு படமாகவே கலையரசி படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.