ரஜினி கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. தோல்வி அடைந்த படத்தை துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!



 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தோல்வி படத்தை ரீமேக் செய்த விசு, அதை வெற்றி படமாக்கியது பெரிய ஆச்சரியம் இல்லை என்றாலும், அந்த படத்தில் ரஜினி கேரக்டரில் எஸ்வி சேகரை நடிக்க வைத்தது தான் ஜீரணிக்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  ஸ்ரீகாந்த், ஜெயசித்ரா, பிரமிளா உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் சதுரங்கம். இந்த படம் 

கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தின் திரைக்கதை வசனத்தை விசு எழுத,  துரை இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதைப்படி, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள். பண்டரிபாய் அவர்களுடைய அம்மா. ரஜினிகாந்த் இளமையில் இருந்தே நல்லவராகவும், பொய் சொல்லாதவராகவும், நியாயமானவராகவும் இருப்பார். அவருக்கு பிரமிளாவை திருமணம் செய்து வைப்பார்கள். 





ஆனால் ரஜினிக்கு நேர் எதிரானவர் ஸ்ரீகாந்த். அவர் அடாவடியாகவும்,  ரவுடியாகவும் இருப்பார், அவருக்கு ஜெயசித்ராவை திருமணம் செய்து வைப்பார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரது வாழ்க்கையும் தலைகீழாக திரும்பும். ரஜினியின் மனைவி பிரமிளா, பேராசை பிடித்தவராக இருப்பார். ரஜினியின் வருமானத்திற்கு ஏற்றபடி செலவு செய்யாமல் அதிகமான வருமானத்தை கொண்டு வாருங்கள், லஞ்சம் வாங்குங்கள் என்று டார்ச்சர் செய்வார். 

இதனால் நியாயமானவரான இருந்த ரஜினி, மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் லஞ்சம் வாங்குவார். இன்னொரு பக்கம்  ரவுடியாகவும், கெட்டவராகவும் இருந்த ஸ்ரீகாந்த், திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறிவிடுவார். தனது உழைப்பால்  பெரிய தொழிலதிபர் ஆகிவிடுவார்.

இந்த நிலையில் நல்லவரான ரஜினி மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல்  லஞ்சம் வாங்கி போலீசில் பிடிபட்டு சிறைக்கு செல்வார். ஆனால் கெட்டவராக இருந்த ஸ்ரீகாந்த், தன்னுடைய உழைப்பால் நல்ல நிலைக்கு செல்வார், இதுதான் சதுரங்கம் படத்தின் கதையாக இருந்தது. 


இந்த படம் மிகவும் சுமாராகவே ஓடியது என்பதும், வெளிப்படையாக சொன்னால் இது ரஜினிக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத்தான் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்காக, விசு, திருமதி ஒரு வெகுமதி என ரீமேக் செய்தார். 



ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்வி சேகர், ஸ்ரீகாந்த் நடித்த கேரக்டரில்  பாண்டியன் நடித்தார்கள்.  எஸ்வி சேகர் ஜோடியாக கோகிலா, பாண்டியன் ஜோடியாக ஜெயஸ்ரீ நடித்தார்கள்.   சதுரங்க படம் போலவே எஸ்வி சேகரின் மனைவி கோகிலா டார்ச்சர் தாங்க முடியாமல், லஞ்சம் வாங்கி போலீசில் சிக்கி கொள்வார். 


கல்லூரி காலத்தில் ரவுடியாக இருந்த  பாண்டியன், திருமணத்திற்கு பிறகு உழைப்பாளி ஆகிவிடுவார். சதுரங்கம் திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீகாந்த் அம்மாவாக பண்டரிபாய் நடித்த நிலையில், திருமதி ஒரு வெகுமதி படத்தில் அந்த அம்மா கேரக்டரை விசு, அக்கா கேரக்டராக மாற்றியிருப்பார். 

எஸ்வி சேகர், பாண்டியன் அக்காவாக கல்பனா நடித்திருப்பார். இந்த படம் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தயாரிப்பாளர் பாலச்சந்தருக்கு நல்ல லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தோல்வி அடைந்த ரஜினியின் திரைப்படத்தை வெறும் எஸ்வி சேகரை வைத்து, வெற்றி படமாக்கியதற்கு விசுவின் திரைக்கதை வசனம் இயக்கம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post

Contact Form