நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்றல்ல, இரண்டல்ல, 17 முறை, ஒரே நாளில், தான் நடித்த இரண்டு திரைப்படங்களை ரிலீஸ் செய்துள்ளார். இந்த தைரியம் வேறு எந்த நடிகருக்கும் வந்ததில்லை என்பதும், பலமுறை ஒரே நாளில் ரிலீஸ் ஆன இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றாலே திரையுலகில் சாதனைதான் ஞாபகம் வரும். அவருடைய சாதனைகளை அவரே உடைத்து விடுவது தான் வழக்கமாக இருக்கும். அந்த வகையில் ஒரே நாளில் 17 முறை அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன
முதல் முறையாக சிவாஜி கணேசன் நடித்த கூண்டுக்கிளி மற்றும் தூக்கு தூக்கி ஆகிய திரைப்படங்கள் 1954ஆம் ஆண்டு ஒரே தேதியில் ரிலீஸ் ஆனது. இதில் கூண்டுக்கிளி திரைப்படம் எம்ஜிஆர், சிவாஜி நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 1955 ஆம் ஆண்டு கோடீஸ்வரன் மற்றும் கள்வனின் காதலி ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது
அதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு நல்ல வீடு, நான் பெற்ற செல்வம் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதில் நல்ல வீடு படம் தோல்வி அடைந்தது என்பதும், நான் பெற்ற செல்வம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு அவள் யார் மற்றும் பாகப்பிரிவினை ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் பாகப்பிரிவினை மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனை அடுத்து 1960ஆம் ஆண்டு பாவை விளக்கு மற்றும் பெற்றமனம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இரண்டுமே நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை அடுத்து 1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி மற்றும் எல்லாம் உனக்காக ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து இரண்டும் சுமாரான வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு முரடன் முத்து, நவராத்திரி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி, இரண்டுமே 100 நாள் படங்களானது.
1967ஆம் ஆண்டு, ஊட்டி வரை உறவு, இருமலர்கள் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ஊட்டி வரை உறவு, கலர் படமாகவும், இரு மலர்கள் கருப்பு வெள்ளை படமாகவும் வந்த நிலையில், இரண்டுமே நல்ல வெற்றி பெற்றது.
1970 ஆம் ஆண்டு விளையாட்டு பிள்ளை மற்றும் தர்பி என்ற ஹிந்தி படம் ஆகியவை ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நல்ல வரவேற்பு பெற்றது. அதே ஆண்டில் சொர்க்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் ஆகிய திரைப்படங்களும் வெளியானது
இதனை அடுத்து 1971 ஆம் ஆண்டு சுமதி என் சுந்தரி, பிராப்தம் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது. இதில் சுமதி என் சுந்தரி 100 நாட்கள் ஓடிய படமாகவும் இருந்தது என்பதும், பிராப்தம் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை சாவித்திரிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது
அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு டாக்டர் சிவா, வைரநெஞ்சம் ஆகிய படங்களும், 1982 ஆம் ஆண்டு ஊரும் உறவும், பரீட்சைக்கு நேரமாச்சு ஆகிய திரைப்படங்களும் வெளியாகின. மேற்கண்ட நான்கு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதன் பிறகு 1984 ஆம் ஆண்டு தாவணி கனவுகள் மற்றும் இரு மேதைகள் ஆகிய படங்கள் வெளியானது. இதில் பாக்யராஜூடன் நடித்த தாவணி கனவுகள் நல்ல வரவேற்பு பெற்றது.
1987 ஆம் ஆண்டு கிருஷ்ணன் வந்தான் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஜல்லிக்கட்டு, சத்யராஜ் உடன் சிவாஜி கணேசன் நடித்த படம் என்பதும் கிருஷ்ணன் வந்தான், தேங்காய் சீனிவாசன் தயாரிப்பில் உருவான படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றல்ல, இரண்டல்ல, 17 முறை ஒரே நாளில், தான் நடித்த இரண்டு திரைப்படங்களை தைரியமாக வெளியிட்டு அதில் பல வெற்றி படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.