பிரபல தமிழ் எழுத்தாளர்களான கல்கி, நா பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெயகாந்தன் என பல எழுத்தாளர்கள், திரை உலகிலும் ஜொலித்து வந்தனர் என்பதும், அவர்களது நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன என்பதும் பலர் அறிந்ததே. அந்த வகையில் எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து, ஏராளமான வாசகர்களை கொண்ட சுஜாதா நாவல்கள் பல, திரைப்படங்கள் ஆகியுள்ளன.
எழுத்தாளர் சுஜாதா ஏராளமான நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியிருந்தாலும், அவரது ஒரு சில நாவல்கள் மட்டுமே படங்கள் ஆகியுள்ளன. குறிப்பாக காயத்ரி என்ற சுஜாதாவின் நாவல்தான், முதன் முதலில் திரைப்படம் ஆனது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த படம் வெளியானது. அதேபோல் இளையராஜாவும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த இசையமைப்பாளராக இருந்தார். சுஜாதாவிடம் கதையை வாங்கி, திரைக்கதை வசனம் எழுதிய பஞ்சுஅருணாச்சலம் இந்த படத்தை பட்டாபிராமன் என்பவரை இயக்க வைத்தார்.
ஜெய்சங்கர் தான் இந்த படத்தின் ஹீரோ, ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியவர்கள் இந்த படத்தில் நடித்தனர். ரஜினிகாந்த் கிட்டத்தட்ட நெகட்டிவ் ஹீரோ கேரக்டரில் நடித்திருந்தார். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, நீலப்படம் எடுத்து விற்பனை செய்யும் கேரக்டரில், ரஜினி நடித்திருந்தார். இந்த நிலையில் தான் ரஜினியிடம் ஸ்ரீதேவி சிக்கிக்கொள்ள, அவரிடமிருந்து ஸ்ரீதேவியை, ஜெய்சங்கர் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் கதை
இதனை அடுத்து சுஜாதாவின் ’ப்ரியா’ என்ற நாவல் திரைப்படமானது. நடிகையான ப்ரியா, சிங்கப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் போது ஒரு பிரச்சனையில் சிக்குவார். துப்பறிவாளர் ரஜினியின் அதை எப்படி சரி செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கரையெல்லாம் செண்பகப்பூ என்ற நாவல் திரைப்படமானது. இது முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்பதும் அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சுஜாதா எழுதிய வித்தியாசமான நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎன் ரங்கராஜன் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படத்திற்கு பாலுமகேந்திரா திரைக்கதை எழுதியிருந்தார்
இந்த நிலையில் தான் சுஜாதாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன், சுஜாதாவின் விக்ரம் என்ற நாவலை, படமாக்கினார். இந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தமன்னா முக்கிய கேரக்டரில் நடித்த, ஆனந்த தாண்டவம் என்ற திரைப்படமும் சுஜாதாவின் நாவல்தான்.
சுஜாதாவின் ஒருசில நாவல்கள் மட்டுமே திரைப்படமாகி இருந்தாலும், அவர் ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான, ரோஜா, திருடா திருடா, உயிரே, ஆகிய படங்களுக்கும் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களுக்கும் அவர் வசனம் எழுதினார். சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா என்ற நாவல் தான் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜாதா ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான பாரதி என்ற திரைப்படத்தை சுஜாதா தான் தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு அவர் லிட்டில்ஜான், நிலா காலம், பாண்டவர் பூமி போன்ற படங்களையும் தயாரித்தார்.
தமிழ் எழுத்துலகில் சுஜாதா செய்த சாதனை மிகப்பெரியது என்ற போதிலும் திரையுலகில் அவரது பங்கு குறைவாகத்தான் இருந்தது. இருப்பினும் இன்றும் சில மறக்க முடியாத படங்களை சுஜாதா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.