அத்திப்பூத்தது போல், குறிஞ்சிப்பூ பூத்தது போல், எப்போதாவது ஒரு அழகிய காவியம் போன்ற திரைப்படம், தமிழ் திரை உலகில் வருவதுண்டு. அப்படி ஒரு படம் தான், 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் உருவான, உதிரிப்பூக்கள். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினர்களூம் ஆச்சரியம் அடைந்து போனார்கள்.
ஒரு படம் 100 நாள் கடந்து, மிக வெற்றிகரமாக ஓடிய படத்தைக் கூட ரசிகர்கள் பார்ப்பார்கள், மறந்து விடுவார்கள். ஆனால் இன்றைக்கும் ஒரு படத்தை வியந்து, நெகிழ்ந்து, கனத்த இதயத்துடன், அந்த படத்தில் வரும் காட்சிகளை பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அது நிச்சயம் உதிரிப்பூக்கள் படத்தை மட்டும் தான் இருக்கும். ஒரு அழகிய கிராமத்தில் ரயிலில் வந்து சரத்பாபு இறங்குவார். அவர் அந்த கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக வருவார். அதே ரயிலில் சத்யன் என்பவர் பள்ளி ஆசிரியராக வருவார். இந்த பள்ளியின் நிர்வாகி மற்றும் அந்த ஊரின் பெரிய மனிதர் தான் விஜயன். விஜயன் ஒரு சேடிஸ்ட் கேரக்டர், அவருக்கு மற்றவர்கள் நன்றாக இருந்தால் பிடிக்காது, நல்ல சட்டை போட்டால் பிடிக்காது, நல்ல மனைவி அமைந்தால் பிடிக்காது, அப்படி ஒரு கேரக்டருக்கு அஸ்வினி என்ற ஒரு அமைதியான மனைவி இருப்பார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பார்கள்.
விஜயன் எப்பொழுதும் அஸ்வினியை திட்டிக்கொண்டே இருப்பார். அவரது அப்பாவையும் தங்கையையும் திட்டிக்கொண்டே இருப்பார், தன்னுடைய கடன்களை எல்லாம் உன் அப்பா தான் அடைக்க வேண்டும் என்றும் கூறுவார். இருப்பினும் கணவரின் திட்டுதலை பொறுத்துக் கொண்டு அஸ்வினி, தனது குழந்தையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்
அஸ்வினி அப்பாவாக சாருஹாசன் மற்றும் தங்கையாக மதுமாலினி நடித்திருப்பார்கள். இந்த நிலையில் தான் புதிதாக ஊருக்கு வந்த வாத்தியார், அஸ்வினியின் தங்கையை காதலிப்பார். இது விஜயனுக்கு தெரிந்த நிலையில், நீங்களே அஸ்வினி தங்கையை கல்யாணம் செய்து கொள்ளலாமே, எதற்காக வேற ஒருவருக்கு உங்கள் கொளுந்தியாளை விட்டுக் கொடுக்கிறீகள் என்று அவருடைய அல்லக்கைகள் தூபம் போடுவார்கள்.
இந்த நிலையில் தான் அஸ்வினியை ஏற்கனவே சரத்பாபு பெண் பார்த்திருப்பார் என்பது தெரியவரும். ஆனால் அவர் இங்கு ஒரு சாடிஸ்டிடம் வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படுகிறாரே என்று அவர் வருத்தப்படுவார், அவருக்கு ஆறுதல் சொல்வார். அஸ்வினியை ஏற்கனவே சரத்பாவுக்கு தெரியும் என்றவுடன் கோபமடைந்த விஜயன், நீ உன் காதலனுடன் சென்று விடு, உன் தங்கையை எனக்கு கட்டி கொடு என்று சண்டை போடுவார்
இதனால் அஸ்வினி கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு சென்று விடுவார். இந்த நிலையில் தான் அஸ்வினி தங்கைக்கும் வாத்தியாருக்கும் திருமணம் நிச்சயமாகும். அப்போது அஸ்வினி திடீரென உடல் நலகோளாறு காரணமாக இறந்து விடுவார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் தனது அக்கா குழந்தைகளை தானே வளர்க்க வேண்டும் என்று அஸ்வினியின் தங்கை முடிவு செய்வார். இதையடுத்து அவர் விஜயனிடம் சென்று எனது அக்கா குழந்தைகளை கொடுத்து விடுங்கள், நான் வளர்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார். அப்போது கதவை சாத்தி அவருடைய உடைகளை எல்லாம் உருவி, நிர்வாணப்படுத்திவிடுவார், ஆனால் கற்பழிக்க மாட்டார். நாளை நீ திருமணம் ஆகி முதலிரவுக்கு செல்லும்போது, இந்த நிகழ்ச்சி உனக்கு ஞாபகம் வர வேண்டும். எப்போது எல்லாம் உன் கணவருடன் சேர்கிறாயோ, அப்போதெல்லாம் இந்த சம்பவம் உனக்கு ஞாபகம் வரவேண்டும், நீ துடிதுடிக்க வேண்டும் என்று விஜயன் கூறுவார்
இந்த சம்பவம் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்தவுடன் கோபமாகி விஜயனை கொலை செய்ய வருவார்கள். இந்த கிராமத்தில் நான் தான் கெட்டவன் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் என்னை கொல்ல வந்த நீங்கள் நல்லவர்களா? நீங்களும் கொலைகாரராக மாறிவிட்டீர்கள் என்று வசனம் பேசிவிட்டு, அவர் தன்னைத்தானே உயிரை விடும் வகையில் ஆற்றில் மூழ்கி இறந்து விடுவார். அவருடைய இரண்டு குழந்தைகளும் உதிரிப்பூக்கள் ஆகிவிடும் என்பதுதான் இந்த படத்தின் முடிவு.
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும், மிக இயல்பாக உயிரைக் கொடுத்து நடித்திருப்பார்கள். குறிப்பாக விஜயன், அஸ்வினி, மதுமாலினி, சரத்பாபு, சாருஹாசன் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். சாருஹாசன் இந்த படத்தில் தான் நடிகராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் பல பாக்யராஜ் படங்களில் நடித்த ராஜாஷெரீப் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் அதேபோல் பின்னாளில் நாயகியாக நடித்த அஞ்சு இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார்கள்
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அதில் கண்ணதாசன் எழுதி, எஸ் ஜானகி பாடிய அழகிய கண்ணே என்ற பாடல் இன்றுவரை மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜா பாடல்களில் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பி இருப்பார் என்பதும் இளையராஜாவின் மிகச்சிறந்த பின்னணி இசை அமைத்த படங்களில் ஒன்று உதிரிப்பூக்கள் என்றும் கூறலாம்.
இந்த படம் 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்திற்கு ஊடகங்கள் மிகச் சிறந்த விமர்சனத்தை கொடுத்தது என்பதும், படம் பார்த்தவர்கள் இயக்குனரை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன கிராமம், நான்கு தெருக்கள், ஆற்றங்கரை இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு அசோக்குமார் தனது கேமரா மூலம் மாயாஜாலம் காட்டி இருப்பார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய ’சிற்றன்னை’ என்ற சிறுகதையைத்தான் அழகாக திரைக்கதை அமைத்து, ஒரு காவியமாக படைத்திருப்பார் மகேந்திரன். இந்த படம் வெளியாகி 40 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்னும் இந்த படம் பேசப்பட்டு கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் மகேந்திரனின் மிகச் சிறப்பான திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.
$$$$$$$$$$$$$$$$